ஆபரேஷன் சிந்தூரின் போது "நாங்களும் மத்தியஸ்தம் செய்தோம்": சீனா கிளப்பும் புதிய சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலின் போது, பதற்றத்தை தணிக்க தாங்களும் முக்கிய பங்காற்றியதாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே இதே போன்ற ஒரு கருத்தை கூறியிருந்த நிலையில், தற்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் இதனை தெரிவித்துள்ளார். மே 2025-இல் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை தணிப்பதில் ஒரு பங்கை கொண்டிருந்ததாக பெய்ஜிங் செவ்வாயன்று கூறியது. பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிலவரங்கள் குறித்த கருத்தரங்கில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, "இந்த ஆண்டில் மியான்மர், ஈரான் அணுசக்தி விவகாரம் மற்றும் பலஸ்தீன-இஸ்ரேல் மோதல்கள் மட்டுமின்றி, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கவும் சீனா 'மத்தியஸ்தம்' (Mediation) செய்தது" என்று பட்டியலிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் பின்னணி
கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 முதல் மே 10 வரை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. பின்னர் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று எல்லை கடந்த தாக்குதலை இந்தியா நிறுத்துவதாக அறிவித்தது. எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், தான் வரி அச்சுறுத்தல் விடுத்ததால் தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில் சீனாவும் அதே பல்லவியை பாடியுள்ளது. எனினும், ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தத்தில் மூன்றாம் நாடு தலையீடு இல்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது இந்தியா.