ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு
செய்தி முன்னோட்டம்
போர்க்களமாக மாறியுள்ள சூடானில் இருந்து இன்று(ஏப் 26) புறப்பட்ட IAF C-130J விமானத்தில் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த 135 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜித்தாவை தற்போது அடைந்துள்ளனர்.
இதற்கு முன் மீட்கப்பட்ட, 2வது பேட்ச்சை சேர்ந்த 148 இந்தியர்களை ஜித்தாவில் வைத்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றார்.
கடற்படை கப்பல் INS சுமேதா இன்று 278 பயணிகளுடன் ஜித்தா துறைமுகத்தை சென்றடைந்தது.
"ஆபரேஷன் காவேரி முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இரண்டாவது IAF C-130J விமானம் போர்ட் சூடானில் இருந்து மேலும் 135 பயணிகளுடன் ஜித்தாவிற்கு புறப்பட்டது. ஆபரேஷன் காவேரியின் கீழ் வெளியேற்றப்பட்டவர்களின் மூன்றாவது குழு இது" என்று இந்திய வெளியுறவுத்துறை ட்வீட் செய்துள்ளது.
details
இந்திய கடற்படையின் INS Teg செவ்வாயன்று 'ஆபரேஷன் காவேரி'யில் இணைந்தது
செவ்வாயன்று, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர், ஜித்தாவில் இருக்கும் சர்வதேச இந்தியப் பள்ளியில் உள்ள போக்குவரத்து வசதியை ஆய்வு செய்தார்.
சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், இந்தியாவுக்கு வருவதற்கு முன், இங்கு தான் சிறிது காலத்திற்கு தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவக் குழுக்களுக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் நடவடிக்கையாக 500 இந்தியர்கள் போர்ட் சூடானை அடைந்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் உதவுவதற்கு இந்திய கடற்படையின் INS Teg செவ்வாயன்று 'ஆபரேஷன் காவேரி'யில் இணைந்தது.