தற்கொலை எண்ணம் இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஓபன்ஏஐ மீது 7 வழக்குகள் பதிவு
செய்தி முன்னோட்டம்
சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது ஏழு புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சாட்ஜிபிடி, எந்த மனநலப் பிரச்சினைகளும் இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரமைகளை (Harmful Delusions) ஏற்படுத்தியது என்றும் இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான்கு பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தவறான மரணம், உதவியுடன் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடகப் பாதிக்கப்பட்டோர் சட்ட மையம் மற்றும் டெக் ஜஸ்டிஸ் சட்டத் திட்டம் ஆகியவை இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்குகளில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், உள் எச்சரிக்கைகளை மீறி, GPT-4o மென்பொருளை அவசரமாக வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அபாயம்
அபாயகரமான உளவியல் கையாளுதல்
இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அபாயகரமான உளவியல் கையாளுதல் தன்மை கொண்டது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, 17 வயதான ஒரு இளைஞர், சாட்ஜிபிடியை உதவிக்காகப் பயன்படுத்தியபோது, அந்தத் தளம் அவருக்கு கழுத்தில் கயிறு முடிச்சு போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்துள்ளதாகச் சான் பிரான்சிஸ்கோ வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்த பயனர் ஈடுபாடு மற்றும் சந்தைப் பங்கை அதிகரிக்கும் நோக்கத்திற்காக, கருவியையும் துணையையும் குழப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்பிற்கான பொறுப்புணர்வை இந்த வழக்குகள் கோருவதாகச் சமூக ஊடகப் பாதிக்கப்பட்டோர் சட்ட மையத்தின் வழக்கறிஞர் மேத்யூ பி.பெர்க்மேன் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலைகளை இதயத்தைத் துண்டாக்கும் சம்பவங்கள் என்று குறிப்பிட்டுள்ள ஓபன்ஏஐ நிறுவனம், நீதிமன்ற ஆவணங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.