ரஷ்யாவிற்கு ரயிலில் பயணம் செய்யும் வடகொரியா அதிபர்; காரணம் தெரியுமா?
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளார். இரு நாட்டின் வளர்ச்சி குறித்தும், ஆயுத பரிமாற்றங்கள் குறித்தும் இந்த சந்திப்பு நிகழவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உச்சிமாநாட்டிற்கு கிம் ஜாங் உன், ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட, அதிக பாதுகாப்பு கவசங்கள் பொருந்திய, தனியார் ரயிலில் பயணம் செய்து ரஷ்யா வந்தடைந்துள்ளார். அவருடன், வடகொரியாவின் முக்கிய அதிகாரிகளும் மற்றும் இராணுவத் தளபதிகளும், ஆயுதத் துறையின் உயர் அதிகாரிகளும் உடன் சென்றதாக, வடகொரியா வெளியிட்ட புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்குப் புறப்படும்முன், பியாங்யாங்கில் ரயிலில் இருந்து கை அசைத்த புகைப்படத்தை அந்த நாடு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
விமானத்திற்கு பதிலாக ரயிலை தேர்வு செய்தது ஏன்?
அதிபர் கிம் பயணித்த ரயில், மணிக்கு 59 கிமீ வேகத்தைத் தாண்டிச் செல்ல முடியாது என்று அறிக்கைகள் கூறுகின்றன. அதற்கு காரணம், அந்த ரயில் எக்கு கொண்டு தயார் செய்யப்பட்டது எனவும், அதனால், அதன் எடை மிகவும் அதிகம் எனவும் கூறப்படுகிறது. கிம் ஜாங் உன்னின் தந்தை, கிம் ஜாங் இல் மற்றும் அவரது தாத்தா கிம் இல் சுங் இருவரும் பறக்க பயந்ததாக கூறப்படுகிறது. கிம் ஜாங் இல் மற்றும் கிம் இல் சுங் இருவரும், விமான சோதனை ஓட்டத்தின் போது, தங்கள் ஜெட் வெடித்ததைக் கண்டதாகவும், அப்போதிருந்து அவர்களுக்கு விமான பயணம் என்றால் பயம் எனவும் தென் கொரிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.
கிம் ஜாங் உன்-இன் விமான பயணங்கள்
தந்தையும், தாத்தாவும் விமான பயணத்திற்கு பயந்தாலும், கிம் ஜாங் உன், சுவிட்சர்லாந்தில் தன்னுடைய உறைவிடப் பள்ளி நாட்களில், நாடு திரும்ப அடிக்கடி விமானத்தில் தான் பயணிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் 2011-இல், வட கொரியா அதிபராக பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான தனது முதல் சந்திப்பிற்காக 2018-இல் சிங்கப்பூர் உட்பட, அவர் எப்போதாவது விமானத்தில் செல்ல விரும்பியுள்ளார். பெரும்பாலும் அவர் ரயிலில் பயணம் செய்வதை விரும்புவதாக கூறப்படுகிறது. அது, அவருடைய குடும்பத்தின் பாரம்பரியத்தை பின்பற்றுவதற்காகவும், அவரின் மூதாதையர்களின் நம்பிக்கைக்கு மரியாதை காட்டும் விதமாகவும் அவர் செய்கிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிம் ஜாங் உன்னின் சொகுசு ரயிலின் சிறப்பம்சங்கள்
கிம் ஜாங் உன்னின் ரயில், அவரது தந்தை மற்றும் தாத்தா பயன்படுத்திய அதே ரயில் ஆகும். 21 குண்டு துளைக்காத பெட்டிகள் இணைக்கப்ட்டுள்ளன. ரயில் பெட்டிக்குள் பட்டு தோலால் செய்யப்பட்ட சோஃபாக்கள் மற்றும் மாநாட்டு அறைகள் உள்ளன என்று Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தை விட, இந்த கவச ரயில் அதிக பாதுகாப்பையும், ஆடம்பரத்தையும் வழங்குகிறது என்று கிம் நம்புகிறார். இது மட்டுமின்றி, இரண்டு தனித்தனி ரயில்கள் பிரதான பரிவாரங்களுடன் உடன் பயணிப்பதாக Chosun Media கூறுகிறது. ரயில் தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னால் செல்லும் ரயிலில் இருப்பவர்கள் பாதுகாப்புச் சோதனைகளைக் கையாள்வார்கள் என்றும், கிம்-இன் ரயிலுக்கு பின்னால் வரும் மற்றொரு ரயிலில் மெய்க்காவலர்களும், துணைப் பணியாளர்களும் செல்வார்கள் எனக்கூறப்படுகிறது.
தினசரி Buffet விருந்து
இந்த ரயில் பயணம் செய்யும் நாட்களில், வட கொரிய அதிபருக்கு தினசரி buffet எனப்படும் விருந்து சாப்பாடு பரிமாறப்படும் என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, ரயில் பயணம் செய்யும் பாதை முழுவதும், அச்சுறுத்தல்களை தவிர்க்க, சுமார் 100 பாதுகாப்பு முகவர்கள் வழி நெடுக இருக்கும் ரயில் நிலையங்களுக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்படுவதாகவும், மற்ற ரயில்கள் நகராமல் தடுக்க, ரயில் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், ஊடக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இதோடு சோவியத் தயாரிப்பான Il-76 விமானப்படை போக்குவரத்து விமானங்கள் மற்றும் Mi-17 ஹெலிகாப்டர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய தளவாட ஆதரவு குழுவும் தயாராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.