போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் இது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக முன்பை விட இப்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார். அதிபர் கிம், தனது நாட்டின் முக்கிய இராணுவ பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்தபோது இதனை தெரிவித்ததாக KCNA செய்தி நிறுவனம் கூறியது. வட கொரியாவின் இராணுவக் கல்வியின் மிக உயர்ந்த இடம் என கருதப்படும் ராணுவ பல்கலைக்கழத்தில் நேற்று கிம் கள வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று KCNA கூறியது. கிம் சமீபகாலமாக வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டை முடுக்கிவிட்டுள்ளார் அதோடு, ரஷ்யாவுடன் நெருக்கமான இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை உருவாக்கி, உக்ரைன்-ரஷ்யா போரில் மாஸ்கோவிற்கு மூலோபாய இராணுவ திட்டங்களுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவும், தென்கொரியாவும் போருக்கு தூண்டுவதாக வடகொரியா குற்றசாட்டு
வடகொரியாவின் எதிரிகள், இராணுவ மோதலை தேர்வு செய்தால், வடகொரியா தனது வசம் உள்ள அனைத்து போர் வழிகளையும் திரட்டுவதன் மூலம் எதிரிக்கு மரண அடியை தயக்கமின்றி சமாளிக்கும் என KCNA பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் கிம் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், திட எரிபொருளைப் பயன்படுத்தி ஒரு புதிய ஹைப்பர்சோனிக் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனையை கிம் மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திரவ-எரிபொருள் ஏவுகணை வகைகளை விட மிகவும் திறம்பட செயல்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சமீப மாதங்களில், தனது நேச நாடுகள் உடன் அதிக தீவிரத்துடனும் இராணுவ ஒத்திகைகளை நடத்திவரும் அமெரிக்காவும், தென்கொரியாவும், இராணுவ பதட்டங்களைத் தூண்டுவதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.