LOADING...
10 ஏவுகணைகளைச் சீறிப்பாய விட்ட வடகொரியா! டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக 'பவர்' காட்டும் கிம் ஜாங் உன்
ஒரே நேரத்தில் 10 ஏவுகணைகளை வீசி வடகொரியா சோதனை

10 ஏவுகணைகளைச் சீறிப்பாய விட்ட வடகொரியா! டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக 'பவர்' காட்டும் கிம் ஜாங் உன்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
07:24 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து, வடகொரியா இன்று (மார்ச் 14) ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது. இது அந்தப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து நடத்தும் 'ஃப்ரீடம் ஷீல்டு' என்ற கூட்டு ராணுவப் பயிற்சியே இந்த ஏவுகணை சோதனையைத் தூண்டியுள்ளது. இந்தப் பயிற்சிகள் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என்று வடகொரியா கருதுகிறது. முன்னதாக, கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், இந்தப் பயிற்சியால் "கற்பனை செய்ய முடியாத பயங்கரமான விளைவுகள் ஏற்படும்" என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விவரங்கள்

ஏவுகணை சோதனையின் விவரங்கள்

இன்று மதியம் 1.20 மணியளவில் பியாங்யாங் அருகே இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இவை சுமார் 340 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் கடலில் விழுந்தன. ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்தாலும், இது ஜப்பானின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை

டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்குக் கட்டியம் கூறுகிறதா?

இந்த ஏவுகணைச் சோதனைகள் ஒருபுறம் மிரட்டலாகத் தெரிந்தாலும், மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தென்கொரியப் பிரதமர் கிம் மின்-சோக் தெரிவித்துள்ள தகவலின்படி, டிரம்ப் இந்த மாத இறுதியில் சீனா செல்லும்போது கிம் ஜாங் உன்னைச் சந்திக்க ஆர்வம் காட்டியுள்ளார். அமெரிக்காவுடன் சுமுகமாக செல்லத் தயார் என்று கிம் ஜாங் உன் குறிப்பிட்டிருந்தாலும், அது அமெரிக்காவின் அணுகுமுறையைப் பொறுத்தே அமையும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

Advertisement

அணு ஆயுதம்

அணு ஆயுதத் திட்டத்தில் உறுதியாக இருக்கும் வடகொரியா

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐநா சபையின் பல்வேறு தடைகளைச் சந்தித்து வந்தாலும், வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடவில்லை. தற்போதைய ஏவுகணை சோதனை மூலம், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தனது ராணுவ வலிமையை உலகிற்கு நிரூபிக்க கிம் ஜாங் உன் முயல்வதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Advertisement