LOADING...
நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்
நைஜீரியா கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்

நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2025
07:50 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவில் சமீப ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பள்ளிக் கடத்தல்களில் இதுவும் ஒன்றாகும். இப்பள்ளி கடத்தல் சம்பவம், நாட்டில் மோசமடைந்து வரும் பாதுகாப்பின்மையைப் பிரதிபலிக்கிறது என்று கிரிஸ்துவ சங்கம் (CAN) தெரிவித்துள்ளது. CAN செய்தித் தொடர்பாளர் டேனியல் அட்டோரி, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார்.

பள்ளி திறப்பு

எச்சரிக்கையை மீறி பள்ளி திறப்பு

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத்துறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நைஜர் மாகாண அரசு, பள்ளியின் நிர்வாகத்தை விமர்சித்துள்ளதுடன், அனுமதி பெறாமல் வகுப்புகளைத் தொடங்கியதால் மாணவர்கள் தேவையற்ற ஆபத்தில் சிக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் நடந்தபோது அப்பகுதியில் காவல் துறை அல்லது அரசுப் பாதுகாப்புப் படைகள் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

துயரம்

கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் துயரம்

காணாமல்போன தங்கள் குழந்தைகளைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், கடத்தப்பட்டவர்களின் குடும்பங்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். தப்பித்த குழந்தைகள் சிதறி ஓடிவிட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றவர்களைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் நகர்ந்து சென்றதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். இந்தச் சம்பவம், நைகீரியாவின் வடக்கு மாகாணங்களில் சமீபத்தில் நடந்த தொடர் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. இந்த வாரம் கெப்பி மாகாணத்தில் 25 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர். மேலும், குவாரா மாகாணத்தில் தேவாலயம் தாக்கப்பட்டு 38 பேர் கடத்தப்பட்டனர். ஜனாதிபதி போலா டின்பு தனது ஜி20 பயணத்தை ரத்து செய்ததுடன், கடத்தப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற அரசின் ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.