உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன
சீன மற்றும் ரஷ்ய விண்வெளி வாகனங்களைக் கண்காணிக்க அமெரிக்கா ஒரு உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீன மற்றும் ரஷ்ய விண்வெளி வாகனங்கள் பிற செயற்கைக்கோள்களை முடக்க அல்லது சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்று அமெரிக்கா இதற்கு விளக்கம் அளித்துள்ளது. "சைலண்ட் பார்கர்" என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் நெட்வொர்க் ஒரு புது வகையான கண்காணிப்பு கருவியாகும். இந்த செயற்கைக்கோள், தரையில் இருக்கும் சென்சார்கள் மற்றும் சிறிய செயற்கைக்கோள்களுடன் இணைந்து செயல்படும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து தோராயமாக 22,000 மைல்கள் (35,400 கிலோமீட்டர்) உயரத்தில் நிலைநிறுத்தப்படும்
சாத்தியமான அச்சுறுத்தல்களை உடனடியாக அடையாளம் காணும் திறன் கொண்ட செயற்கைகோள்
இதன் சுழற்சி பூமியின் சுழற்சி வேகத்திற்கு இணையாக இருக்கும். இதை புவி ஒத்திசைவு சுற்றுப்பாதை என்று குறிப்பிடுகின்றனர். இந்த செயற்கைக்கோள் அமைப்பு, முக்கியமான அமெரிக்க அமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்காணித்து, எச்சரிக்கைகளை வழங்கும் என்று விண்வெளிப் படையும் அதன் ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். விண்வெளியில் பொருட்களைத் தேட, கண்டறிய மற்றும் கண்காணிக்க இந்த அமைப்பு உதவும். சாத்தியமான அச்சுறுத்தல்களை உடனடியாக அடையாளம் காணும் திறனும் இதற்கு இருக்கிறது. இந்த திட்டம், அமெரிக்க விண்வெளிப் படை மற்றும் தேசிய உளவுத்துறை அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். மேலும், இந்த சைலண்ட் பார்கர் செயற்கைக்கோள் ஜூலை மாதத்திற்குப் பிறகு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.