காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி
கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் நடத்தப்பட்ட கொடிய ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது. தனது மூன்று வீரர்களை ஹமாஸ் கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவுகளை நிராகரித்தார். மேலும் ஹமாஸின் துருப்புக்களை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவது மற்றும் போரை நிறுத்துவது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய எதிர்த்தாக்குதலின் விளைவாக குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரஃபாவில் இராணுவத் தாக்குதல் நடத்துவது உறுதி: நெதன்யாகு
இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, 10 எறிகணைகள் ரஃபாவிலிருந்து எல்லைக் கடவை நோக்கி ஏவப்பட்டன. இந்நிலையில், தற்போது காசாவிற்குள் உதவி லாரிகளை நுழைய விடாமல் எல்லைக் கடவை மூடப்பட்டுள்ளது. ஹமாஸின் தாக்குதலால் 10 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடவுப்பாதை எவ்வளவு காலம் மூடப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான சமீபத்திய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை, பாலஸ்தீனிய போராளிக் குழுவின் முக்கிய கோரிக்கைகள் இஸ்ரேலால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது என்று ஹமாஸ் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிற மேற்கத்திய அதிகாரிகளின் பல எச்சரிக்கைகள் விடுத்தபோதிலும், ரஃபாவில் இராணுவத் தாக்குதலை நடத்த நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.