Loading...
நேபாளம் - திபெத் எல்லையில் பேரழிவு: 392 பேர் பலி, 1,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர்

நேபாளம் - திபெத் எல்லையில் பேரழிவு: 392 பேர் பலி, 1,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2026
07:15 am

செய்தி முன்னோட்டம்

நேபாளம் மற்றும் சீனாவுக்கு சொந்தமான திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இமயமலையின் இடுக்குப்போன்ற பள்ளத்தாக்குகளில் வீடுகள், பாலங்கள் மற்றும் சாலைகள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கிராமங்களே உருத்தெரியாமல் அழிந்துள்ளன. காணாமல் போன 1,468 பேரில் பெரும்பாலானோர் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா மற்றும் சாகசப் பயணம் சென்ற வெளிநாட்டவர்கள் ஆவர். திபெத்தில் உள்ள புனித கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்து பக்தர்களும் இதில் அடங்குவர்.

மீட்புப் பணி

முடுக்கி விடப்பட்ட மீட்புப் பணி

நேபாள பகுதியில் இதுவரை 389 உடல்கள் மீட்பு; 910 பேர் மாயம் (517 வெளிநாட்டவர்கள் உட்பட), அதே நேரத்தில், திபெத் பகுதியில் 3 உடல்கள் மீட்பு; 558 பேர் மாயம் (260 வெளிநாட்டவர்கள் உட்பட).

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 40 தொங்கு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

40 கிலோமீட்டருக்கும் அதிகமான (25 மைல்) சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் மூலம் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறை ஒன்று உடைந்ததே இத்தகைய பிரம்மாண்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு முதன்மை காரணம் என சர்வதேச மலை ஆராய்ச்சி நிபுணர்கள் (ICIMOD) தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தல்

மீண்டும் உருவாகும் புதிய வெள்ள அபாயம்

ஆறுகளின் குறுக்கே அடித்து வரப்பட்ட மண் மற்றும் பாறை இடிபாடுகள் தேங்கி, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் செயற்கையான ஏரிகளை உருவாக்கியுள்ளன.

சீன பகுதியில் உருவாகியுள்ள ஏரியில் அடுத்த 3 நாட்களில் சுமார் 30 லட்சம் கன மீட்டர் நீர் (1,200 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்குச் சமமானது) தேங்கும் என்றும், வரும் செப்டம்பர் 1-க்குள் ஏரிக்கரை உடைந்து மீண்டும் பேரழிவு வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகள் காரணமாக உருவான ஏரிகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து மீண்டும் வெள்ளம் பெருகலாம் என்பதால், நதிக்கரையோரம் வசசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இரு நாட்டு அரசு அமைப்புகளும் கேட்டுக்கொண்டுள்ளன.

ADVERTISEMENT