நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு: மனாசுலு பகுதியில் 40 வீடுகள், 6 பாலங்கள் அடித்து செல்லப்பட்டது
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தின் மனாசுலு மலையேற்றப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 40 வீடுகளும், 6 பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் 10 பேர் வரை மாயமாகியுள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பின்றி தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து மேற்கு சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள சுப்னுபிரி பகுதியில் புதிகந்தகி ஆற்றின் கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரணம்
திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் மற்றும் பாதிப்புகள்
ஆற்றின் கிளை நதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நீர் மற்றும் வண்டல் மண் தற்காலிகமாகத் தடையின்றித் தேங்கியதால் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
உங்கிலுங் நதிப் பகுதிக்கு அருகில் உள்ள 5 பேரும், வேறு சில இடங்களில் கால்நடை மேய்க்கும் 4 முதல் 5 இடையர்களும் மாயமாகியுள்ளனர்.
நேபாள ராணுவத்தினர் இதுவரை 49 பேரை மீட்டுள்ளனர்.
பாதிப்பு
உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறை பாதிப்பு
சல்லேரி பகுதியில் கட்டப்பட்டு வரும் 341 மெகாவாட் புதிகந்தகி நீர்மின் திட்டம் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.
அருகாட் பகுதியில் புதிகந்தகி நதி அபாயக் கட்டமான 5 மீட்டரைத் தாண்டி 8.4 மீட்டர் உயரத்திற்குப் பாய்ந்ததால் நீர்மட்டக் கண்காணிப்பு நிலையம் அடித்துச் செல்லப்பட்டது.
திரிசூலி மற்றும் நாராயணி நதிக்கரைகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலையுதிர் கால சுற்றுலா பருவம் என்பதால் மனாசுலு மலையேற்றப் பகுதிக்கு சென்ற ஜகத் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், லோக்பா மற்றும் செக்கம் பார் பகுதியில் மேலும் பலர் சிக்கித் தவிக்கின்றனர்.