பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு
ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாக கொண்ட பசுக்களுக்கு பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளில் கிராக்கி அதிகரித்து வருகிறது. இந்த மாட்டின் இறைச்சியில் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் பலரும் இதை விரும்பி வாங்கி செல்கின்றனராம். தற்போது பிரேசில் நாட்டில் இருக்கும் மாடுகளில் 80% மாடுகள் நெல்லூர் இனத்தை சேர்ந்தவைகளாகத் தான் இருக்கிறது. அதவாது பிரேசிலில் மட்டும் 16.70 கோடி நெல்லூர் இன மாடுகள் உள்ளன. மேலும், நெல்லூர் இனத்தை சேர்ந்த காளைகளின் அரை மில்லி லிட்டர் விந்தணுக்கள் ரூ.4 லட்சத்திற்கு வெளிநாடுகளில் விற்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய மாடுகளை விட அதிகமாக இந்த மாடுகள் பால் கறக்கின்றன
நெல்லூர் காளைகளின் விந்தணுக்களை வைத்து பல பசுக்கள் செயற்கை முறையில் கருத்தரிக்கப்படுவதால் அதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை மாடுகள் அதிக வெப்பநிலையிலும் உயிர் வாழ கூடியவை. வெள்ளை நிற தடிமனான தோலை இந்த வகை மாடுகள் கொண்டிருப்பதால் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் இவைகளை அண்டுவதில்லை. மேலும், ஐரோப்பிய மாடுகளை விட 30% அதிகமாக இந்த மாடுகள் பால் கறக்கின்றன. இதனால், இந்த மாடுகளுக்கு கிராக்கி அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நெல்லூர் ரக பசு ஒன்று பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போனது. தற்போது உள்ள நிலையில், இந்த வகை மாடுகளே உலகின் விலை உயர்ந்த மாடுகளாகும்.