306 ஆண்டுகால கின்னஸ் சாதனை முறியடிப்பு: உலகின் இளைய வயது ஆண் பேராசிரியரானார் 18 வயது இளைஞர்
செய்தி முன்னோட்டம்
பொதுவாக 18 வயதில் பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் உயர்கல்விக்காக கல்லூரியை தேர்வு செய்வதிலும் அல்லது முதலாமாண்டு வகுப்புகளில் நுழைவதிலும் பிஸியாக இருப்பார்கள். ஆனால், அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த 18 வயதான நெதன் தாமஸ், அதே வயதில் பொறியியல் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியராக வகுப்பறையில் கால் பதித்து உலக சாதனை படைத்துள்ளார். தனது 18 வயதில் பேராசிரியராக பணியில் சேர்ந்ததன் மூலம், உலகின் மிக இளைய வயது ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனையை நெதன் தாமஸ் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1717-ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் கணிதவியலாளர் காலின் மெக்லாரின தனது 19-வது வயதில் பேராசிரியராகி படைத்த 306 ஆண்டுகால சாதனையை இதன் மூலம் நெதன் தகர்த்தெறிந்துள்ளார்.
பயணம்
10 வயதில் தொடங்கிய வியக்க வைக்கும் பயணம்
10 வயதில் பள்ளிப் படிப்பைப் படிக்கும் போதே, மியாமி டேட் கல்லூரியில் 'டூயல் என்ரோல்மென்ட்' முறையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.
14வது வயதில், புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் இணைந்து மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை சிறப்புத் தகுதியுடன் நிறைவு செய்தார்.
18வது வயதில், தான் சிறு வயதில் படித்த அதே கல்லூரிக்கு தற்போது பேராசிரியராகத் திரும்பியுள்ளார்
தற்போது அவர் மியாமி டேட் கல்லூரியில், பொறியாளர்களுக்கான சி-ப்ரோகிராமிங் பாடப் பிரிவின் பயிற்றுநராகப் பணியாற்றி வருகிறார்.
அங்கு பயிலும் மாணவர்கள் பலரும் இவரின் அதே வயதை ஒத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இலக்கு
அடுத்த இலக்கு: சட்டத்துறை வல்லுநர்!
கற்பித்தல் மற்றும் பொறியியல் துறையோடு நெதனின் கனவுகள் முடிந்துவிடவில்லை.
தற்போது மியாமி பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் 'ஜூரிஸ் டாக்டர்' சட்டம் பயின்று வரும் அவர், 2028-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ளார்.
பொறியியல் பின்னணியுடன் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பாதுகாப்பதே தனது அடுத்த இலக்கு என அவர் கூறுகிறார்.
வயது என்பது வெறும் எண் மட்டுமே; கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் அர்ப்பணிப்புமே ஒருவரை உயர்த்தும் என்பதற்கு நெதன் தாமஸின் இந்த கின்னஸ் சாதனைப் பயணம் மிகச்சிறந்த சான்றாகும்.