எவரெஸ்ட் சிகரத்தில் புதிய உலக சாதனை; ஒரே நாளில் 274 பேர் ஏறி அசத்தல்
செய்தி முன்னோட்டம்
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில், பனிப்பாறைகள் பாதையை மறைத்ததால் இந்த ஆண்டின் வசந்த கால மலையேற்ற பருவம் தாமதமாக தொடங்கியது. இருப்பினும், அண்மையில் நிலவிய சாதகமான வானிலையைப் பயன்படுத்தி, நேபாளம் வழியாக ஒரே நாளில் இமாலய அளவாக 274 மலையேறுபவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2019 மே 22 அன்று நேபாளத்தின் தெற்குப் பகுதி வழியாக 223 பேர் ஏறியதே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
வரிசை
'மரண மண்டலத்தில்' நீண்ட வரிசை
இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்குக் கட்டணம் 11,000 டாலரிலிருந்து 15,000 டாலராக உயர்த்தப்பட்ட போதிலும், மலையேறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள, 'மரண மண்டலம்' (Death Zone) என்று அழைக்கப்படும் பகுதியில் மலையேறுபவர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த உயரத்தில் 20 மணி நேரத்திற்கு மேல் தங்குவது உயிருக்கே ஆபத்தானது என்பதால், கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு செல்வது அவசியமாகிறது.
சாதனை
சாதனை படைத்த சாதனையாளர்கள்
இந்த மலையேற்றப் பருவத்தில் பல அரிய சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. நேபாளத்தைச் சேர்ந்த 56 வயதான புகழ்பெற்ற மலையேற்ற வழிகாட்டி காமி ரீட்டா ஷெர்பா, 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். 'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் 52 வயது லாக்பா ஷெர்பா, 11-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி அதிக முறை ஏறிய பெண் என்ற சாதனையைப் புதுப்பித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி வீரர் ருஸ்டாம் நபீவ் (34), செயற்கைக் கால்கள் (Prosthetics) இல்லாமலேயே எவரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
சோகங்கள்
சாதனையின் நடுவே நேர்ந்த சோகங்கள்
இந்த இமாலய சாதனைகளுக்கு மத்தியில் சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. நேபாளத்தின் பின்தங்கிய சமூகத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்ட முதல் மலையேற்ற வீரரான 35 வயது பிஜய் கிமிரே, கடுமையான உயர நோய் (Altitude Sickness) காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கேம்ப் 3 அருகே பனிப்பாறைப் பள்ளத்தில் வழுக்கி விழுந்து 21 வயது வழிகாட்டி புரா கியால்ஜென் ஷெர்பாவும், கடந்த மே 3 அன்று லாக்பா டெண்டி ஷெர்பா என்ற மற்றொரு வழிகாட்டியும் உயிரிழந்தனர். இந்த நெரிசல்கள் ஆபத்தானவை என்றாலும், முறையான திட்டமிடல் இருந்தால் இதனைத் தவிர்க்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.