பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல்முறையாக பேசினார். அவர்களின் கலந்துரையாடலின் போது, ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான பங்களாதேஷிற்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கும் முகமது யூனுஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்தார். பங்களாதேஷில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து அவர் இந்த உத்தரவாதத்தை கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி முன்பு கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பதிவு
முடிவுக்கு வந்த ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகள் பதவிக்காலம்
பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால பதவிக்காலம் ஆகஸ்ட் 5 அன்று திடீரென முடிவுக்கு வந்தது. அவரது அரசாங்கத்திற்கு எதிரான வன்முறை எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அவர் ராஜினாமா செய்தார். ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பங்களாதேஷில் குறைந்தது இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 205 தாக்குதல்களை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீடுகள், கடைகள் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், டாக்காவில் உள்ள ஷாபாக் சந்திப்பை இந்துக்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.