ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்
ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம் வியாழனன்று ஈரானுக்கான விமானங்களின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தது. இது ஈரானுக்கு இஸ்ரேல் கொடுக்கும் பதிலடியாக பார்க்கப்படுகிறது. அதனால், மத்திய கிழக்கில் கவலைகள் எழுந்துள்ளன. ரஷ்யாவும் தனது குடிமக்களிடம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால், ஏப்ரல் 1 தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 13 வரை விமானங்கள் நிறுத்தம்
இந்நிலையில், லுஃப்தான்சா விமான நிறுவனம் வியாழன் அன்று ஈரானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை ஏப்ரல் 13 வரை நிறுத்திவைத்துள்ளதாக கூறியது. ஈரானில் இரவைக் கழிப்பதற்காக பணியாளர்கள் இறங்குவதைத் தவிர்ப்பதற்காக கடந்த வார இறுதியில் பிராங்பேர்ட்டில் இருந்து தெஹ்ரானுக்கு செல்லும் விமானத்தை இயக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறிப்பாக இஸ்ரேல், லெபனான் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என ரஷ்யா தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.