போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) உடன் போர் ஜெட் இன்ஜின்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MOU) கையெழுத்திட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், ஒரு முக்கிய மைல்கல் என்று GE ஏரோஸ்பேஸ் தெரிவித்திருக்கிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய வகிக்கும் என்று அந்நிறுவனம் கூறி இருக்கிறது. பிரதமர் மோடி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஏற்கனவே, இந்த பயணத்தின் போது, இந்தியாவிற்கு புதிய ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
F414 இன்ஜின்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் F414 இன்ஜின்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான ஏற்றுமதி அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாக GE ஏரோஸ்பேஸ் தெரிவித்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் இந்திய விமானப்படையின் இலகுரக போர் விமானம் Mk2 திட்டத்தின் ஒரு பகுதியாகும். "இந்தியா மற்றும் HAL உடனான நீண்டகால நட்பினால் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் சாத்தியமாகி இருக்கிறது" என்று GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி H. லாரன்ஸ் கல்ப் ஜூனியர் கூறியுள்ளார்.