Page Loader
இந்தியாவிற்கு புதிய ராணுவ தளவாடங்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா
இந்தியாவிற்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் அமெரிக்கா

இந்தியாவிற்கு புதிய ராணுவ தளவாடங்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 22, 2023
03:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமானது இந்தியாவிற்கு புதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து அதிகமான ராணுவ உபகரணங்களை இறங்குமதி செய்யும் நாடாக இருந்து வருகிறது இந்தியா. இந்திய ராணுவத்திற்கு தேவையான அதிகளவிலான உபகரணங்கள் ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ராணுவ உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை இந்தியா குறைக்க வேண்டும் என்பதற்காக, தங்களுடைய ராணுவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்கவிருக்கிறது அமெரிக்கா. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் முக்கிய நிகழ்வாக, இந்த பாதுகாப்பு உபகரணங்களின் ஒப்பந்தமே இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து நேரடியாக ராணுவ உபகரணங்களை வாங்குவதை விட, அதனை இந்தியாவில் தயாரிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது இந்தியா.

இந்தியா

என்னென்ன ராணுவ உபகரணங்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படுகிறது? 

30மிமி பீரங்கி, 105மிமீ மொபைல் துப்பாக்கி பொருத்தப்பட்ட 'ஸ்ட்ரைக்கர் V-ஹல் ஆர்மர்டு இன்ஃபேன்ட்ரி' வாகனத்தை இந்தியாவிற்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்க பாதுகாப்புத்துறை. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களை எதிர்த்துப் போராட இந்த வாகனங்களையே அமெரிக்கா பயன்படுத்தியது. இந்த ராணுவ வாகனங்களை அமெரிக்காவின் உதவியுடன் இந்தியாவிலேயே தயாரிக்க விரும்புகிறது இந்தியா. மஹிந்திரா டிஃபன்ஸ் சிஸ்டம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 145மிமீ M777 ஹோவிட்சர்களை ஜம்மூ-காஷ்மீர் எல்லையில் பயன்படுத்தி வருகிறது இந்தியா. இதனை 155மிமீ M777 ஹோவிட்சர்களாக மேம்படுத்த அமெரிக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் போர் விமானங்களின் பயன்படுத்தப்படும் GE F414 ஜெட் இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரித்துப் பயன்படுத்தும் வகையில், அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொடுக்கவிருக்கிறது அமெரிக்கா. இந்த இன்ஜினுடன் 350 புதிய போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியா.