இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அரசு, தனது அமைச்சர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்துள்ளது. பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்தை கேலி செய்து மாலத்தீவு அமைச்சர் ஒருவர் எக்ஸ் தளத்தில் கேலியாக கருத்து தெரிவித்ததையடுத்து சர்ச்சை வெடித்தது. தற்போது நீக்கப்பட்ட அந்த ட்வீட்களில், மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா, பிரதமர் மோடியை,"கோமாளி" என்றும் "இஸ்ரேலின் கைப்பாவை" என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, பல மாலத்தீவு அமைச்சர்கள், இந்திய கடற்கரைகள், மாலத்தீவுகளால் பராமரிக்கப்படும் தூய்மைத் தரத்தை விட மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறியதை அடுத்து நிலைமை மேலும் மோசமடைந்தது. உள்ளூர் ஊடகங்களின்படி, தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் ஆவர்.
ரத்து செய்யப்பட்ட 8000 ஹோட்டல் முன்பதிவுகள், 2,500 விமான டிக்கெட்டுகள்
முன்னதாக மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்றும், அது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கூறியது. எனினும், கண்டனங்கள் வலுத்த நிலையில் இம்மூன்று அமைச்சர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுபற்றி வெளியான அறிக்கையில், "அரசுப் பதவிகளில் இருந்தபோது சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகளை செய்தவர்கள் இப்போது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று மாலத்தீவு அரசாங்கம், இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல் தெரிவித்துள்ளது. இதனிடையே பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்ததாக அறிவித்தனர். தொடர்ந்து, 8,000 ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் மாலத்தீவுக்கான 2,500 விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.