102$ மில்லியன் மதிப்பிலான பாரிஸ் லூவர் அருங்காட்சியக நகைகள் கொள்ளையில் இருவர் கைது
செய்தி முன்னோட்டம்
பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து $102 மில்லியன் மதிப்புள்ள விலைமதிப்பற்ற நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக இரண்டு பேரை பிரெஞ்சுப் போலீஸார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 19 ஆம் தேதி, அருங்காட்சியகம் திறந்திருந்த நேரத்திலேயே நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தில், திருடர்கள் எட்டு மதிப்புமிக்க நகைகளுடன் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் பிரான்ஸ் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், தேசிய அவமானமாகவும் பார்க்கப்பட்டது. கொள்ளையர்கள் ஒரு போலி அடையாளத்தைப் பயன்படுத்தி கிரேன் பொருத்தப்பட்ட சரக்கு லிஃப்ட் லாரியை அபல்லோ கேலரிக்கு அருகில் நிறுத்தினர். கட்டிட வேலை செய்பவர்கள் போல் உடையணிந்திருந்த அவர்கள், ஜன்னல் வழியாக மேல் தளத்திற்குள் நுழைந்து, வெறும் எட்டு நிமிடங்களில் இந்தச் சாமர்த்தியமான கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினர்.
மூடல்
அருங்காட்சியகம் மூடல்
சரியாக 9.34 மணிக்குத் திருட்டு நடந்ததும் அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. பாதுகாப்பு ஊழியர்கள் பார்வையாளர்களை விரைவாக வெளியேற்றினர். கொள்ளையர்கள் ஒரு நிமிடத்திற்குள் டிஸ்க் கட்டர்களைப் பயன்படுத்தி இரண்டு காட்சிப் பெட்டிகளின் கண்ணாடியை உடைத்து நகைகளை அபேஸ் செய்தனர். பின்னர் 9.38 மணிக்கு அவர்கள் வந்த அதே ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்று, வெளியே காத்திருந்த இரண்டு ஸ்கூட்டர்களில் தப்பி ஓடினர். திருடப்பட்ட பொருட்களில், பேரரசி மேரி-லூயிஸின் மரகத நெக்லஸ் மற்றும் காதணிகள் மற்றும் பேரரசி யூஜினியின் கிரீடம் மற்றும் பிரோச் உள்ளிட்ட பிரெஞ்சு அரச குடும்பத்துடன் தொடர்புடைய மிகவும் மதிப்புமிக்க வரலாற்றுச் சின்னங்கள் அடங்கும். பேரரசி யூஜினியின் கிரீடம் பின்னர் அருங்காட்சியகத்திற்கு வெளியே மீட்கப்பட்டாலும், மீதமுள்ள ஏழு நகைகளும் இன்னும் கிடைக்கவில்லை.