குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆணுறுப்பு அகற்றப்படும்: லூசியானாவில் அதிரடி சட்டம்
அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலம், குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிரான ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்ற உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்தவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன் செய்ய அனுமதிக்கும் சட்டம் இதுவாகும். காஸ்ட்ரேஷன் என்பது பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை நிறுத்துவதற்காக செய்யப்படும் விரைகள் அல்லது கருப்பைகளை அகற்றும் அறுவை சிகிச்சையாகும். 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்யும் நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன் தண்டனை விதிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை லூசியானாவின் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. கடந்த திங்கட்கிழமை(ஜூன் 3) இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அறுவை சிகிச்சை தண்டனையை வழங்கும் முதல் அமெரிக்க மாநிலம்
குடியரசுக் கட்சி ஆளுநர் ஜெஃப் லாண்ட்ரி அந்த மசோதாவில் கையெழுத்திட்டால், அது சட்டமாக்கப்படும். அவர் கையொப்பமிட்டால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனையை அமல்படுத்தும் முதல் மாநிலமாக லூசியானா இருக்கும். அமெரிக்காவின் அலபாமா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாநிலங்கள் இரசாயன காஸ்ட்ரேஷனை அனுமதிக்கின்றன. ஆனால், தற்போது வரை யாரும் கட்டாய அறுவைசிகிச்சை காஸ்ட்ரேஷனை நீதித்துறை தண்டனையாக அறிமுகப்படுத்தவில்லை. இரசாயன காஸ்ட்ரேஷனுக்கான சட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாக லூசியானாவில் நடைமுறையில் உள்ளது. னால் அவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது பாலியல் ஹார்மோன்களை உண்டாக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் மருந்துகளை வழங்குவதாகும்.