LOADING...
லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 80 பேர் படுகாயம்
லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 80 பேர் படுகாயம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2026
08:16 am

செய்தி முன்னோட்டம்

பிரிட்டன் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனுக்கு வடக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ஃபோர்ட் நகருக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், ரயில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 80க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேருக்கு நேர் மோதல்

லண்டன் நோக்கிச் சென்ற போது நிகழ்ந்த மோதல்

ரயில் கண்காணிப்புத் தரவுகளின்படி, விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களும் தெற்கு நோக்கி லண்டன் செயின்ட் பான்கிராஸ் நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோர்பியிலிருந்து லண்டன் சென்ற ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வேயின் மாலை 4:40 மணி சேவையும், நாட்டிங்ஹாமிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற மாலை 3:50 மணி சேவையுமே பெட்ஃபோர்ட் அருகே இந்த மோதலில் சிக்கியுள்ளன.

மீட்புப் பணிகள்

போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணிகள்

மாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு உடனடியாக அந்தப் பகுதியில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது. சம்பவ இடத்திற்குப் போர்க்கால அடிப்படையில் தீயணைப்பு வாகனங்கள், காவல்துறைப் பிரிவுகள், ஆம்புலன்ஸ்கள், ஆபத்தான பகுதி மீட்புக் குழுவினர் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் மருத்துவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்த பயணிகளைத் தண்டவாளத்திற்கு அருகில் திரட்டி, முதலுதவி வழங்கப்பட்ட பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

Advertisement

விபத்தின் கொடூரம்

பயத்தில் அலறிய பயணிகள் விவரித்த விபத்தின் கொடூரம்

விபத்தின் போது ரயிலின் பின் பகுதியில் பயணித்த பீட்டர் நாப் என்ற பயணி, எவ்வித முன் எச்சரிக்கையும் இன்றி இந்த விபத்து நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மோதிய வேகத்தில் இருக்கைகளில் இருந்து பயணிகள் தூக்கி வீசப்பட்டதாகவும், ரயிலுக்குள் புகை மூட்டம் சூழ்ந்ததால் மக்கள் பயத்தில் அலறத் தொடங்கியதாகவும் அவர் விவரித்துள்ளார். பல பயணிகளுக்குக் கால்கள் முறிந்த நிலையிலும், கடுமையான இரத்தக் காயங்களுடனும் பேச்சு மூச்சின்றி கிடந்ததாகவும், தான் கதவின் இடுக்கில் நசுங்கித் தப்பித்ததாகவும் அவர் அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

ரயில் சேவைகள் ரத்து

ரயில் சேவைகள் ரத்து மற்றும் விசாரணை அறிவிப்பு

இந்த கோர விபத்து குறித்து இரயில்வே ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்எம்டி தொழிற்சங்கம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக லண்டன் செயின்ட் பான்கிராஸ் நிலையத்திற்கான அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த தடத்தில் மீட்புப் பணிகளும், விபத்திற்கான காரணம் குறித்த தொழில்நுட்ப விசாரணைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement