அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி; 279 பயணிகளுடன், விமானம் பத்திரமாக தரையிறக்கம்
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதை ஓட்டிச் சென்ற 25 வருட அனுபவம் வாய்ந்த விமானி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) இரவு 10.11 மணிக்கு அமெரிக்காவின் மியாமியில் இருந்து 279 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் லட்டம் ஏர்லைன்ஸ் விமானம் சிலிக்கு கிளம்பியது. விமானம் கிளம்பி சுமார் மூன்று மணி நேரம் கழித்து விமானிகளில் ஒருவரான கேப்டன் இவான் ஆண்டர் அசௌகரியமாக உணர்ந்ததை அடுத்து கழிவறைக்கு சென்றுள்ளார். எனினும் அங்கிருந்து அவர் திரும்பி வராத நிலையில், ஊழியர்கள் சோதனை செய்ததில் அவர் மயக்கமடைந்து கிடந்துள்ளார். இதையடுத்து, விமானம் அவசரமாக அருகில் இருந்த பனாமா நகரின் டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
லட்டம் ஏர்லைன்ஸ் நிறுவனம் இரங்கல்
விமான நிலையத்தில் கேப்டன் இவான் ஆண்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். விமானியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து லட்டம் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஏர்லைன்ஸ் குழுமம், நேற்று மியாமி-சாண்டியாகோ வழித்தடத்தில் இருந்த எல்ஏ505 விமானம், கட்டளைக் குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை காரணமாக பனாமாவில் உள்ள டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது. விமானம் தரையிறங்கியபோது, அவசரகால சேவைகள் உயிர்காக்கும் உதவியை வழங்கின. ஆனால் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்." எனத் தெரிவித்துள்ளது. மேலும், கேப்டன் தனது தொழிலில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், விமான சேவைக்கு அவர் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்பு நிறுவனத்திற்கு பெரும் சொத்தாக இருக்கும் என்றும் விமான நிறுவனம் கூறியது.