அமெரிக்கா: சதை உண்ணும் போதைப்பொருளால் ஜாம்பியாக மாறும் மக்கள்
அமெரிக்க அதிகாரிகள், "ஜாம்பி மருந்து"என்ற போதைப்பொருள் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக 'டிரான்க்' என அழைக்கப்படும் 'சைலாசைன்' என்ற மருந்து, விலங்குகளை அமைதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு கொடிய மயக்க மருந்தாகும். ஆனால், இந்த மருந்து பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த மருந்தின் பயன்பாடு போதைக்கு அடிமையானவர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதால், இது பொது சுகாதார அபாயத்தைத் தூண்டியுள்ளது. இந்த போதைப்பொருள் மனிதர்களின் சதையை அழுகச் செய்து, சிதைக்கச் செய்யும் திறன் வாய்ந்தது. எனவே, இந்த போதைப்பொருள் பயன்பாட்டை ஆவணப்படுத்தும் சோதனைத் திட்டத்தை லாஸ்-ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அமெரிக்க மருந்து அமலாக்க நிர்வாகத்தின்(DEA) சிறப்பு முகவர் பில் போட்னர், 'சைலாசைன்' "கொடூரமான முறையில் மக்களை சிதைக்கிறது" என்று கூறியுள்ளார்.
சைலாசைனுடன் ஃபெண்டானில் கலக்கப்படுவது மிக கொடிய மருந்தாக மாறியுள்ளது
"இது ஒருவர் சுவாசிப்பதைத் தடுக்கும் சக்தி கொண்டது. மேலும் சைலாசைனுடன் கலக்கப்பட்டிருக்கும் பொருட்கள், வாசோகன்ஸ்டிரிக்டரை உருவாக்குகிறது. எனவே நீங்கள் அதை ஊசி மூலம் எடுத்துக்கொள்ளும் போது, அது உங்களது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது." என்று அவர் மேலும் கூறியுள்ளார். DEA மற்றும் LA கவுண்டி சுகாதாரத்துறை ஆகியவை 'சைலாசைன்' குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையால் ஏப்ரல் மாதம் முதன்முதலாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. "கிரேட்டர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில், போலி ஃபெண்டானில் மாத்திரைகளுக்குள் சைலாசைன் கலந்து விற்கப்படுகிறது" என்று ஒரு DEA அதிகாரி கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஃபெண்டானில் பவுடரில் 23% மற்றும் ஃபெண்டானில் மாத்திரைகளில் 7% சைலாசைனைக் கலக்கப்பட்டிருந்ததை அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது.