அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இருதரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு விவாதங்களுக்கு அழைப்பு விடுத்தது "நேர்மறையானது" என்றும், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது என்றும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இன்று(ஜூன் 5)தெரிவித்துள்ளார். புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தின் விதிகளை மீறாமல் ரஷ்யா நடந்துகொண்டால், 2026ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை அமெரிக்காவும் அதன் விதிகளை மீறாமல் நடந்துகொள்ளும் என்று சல்லிவன் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு எதிரி நாடுகளுக்கும் இடையே செயலில் உள்ள ஒரே அணு ஆயுத ஒப்பந்தம் இது மட்டுமே. இந்த ஒப்பந்தத்திலிருந்தும் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் விலகியது.
இது இராஜதந்திர வழிகள் மூலம் நடைமுறைப் படுத்தப்படும்: ரஷ்யா
இந்நிலையில், "இது திரு சல்லிவன் வெளியிட்ட மிக முக்கியமான மற்றும் நேர்மறையான அறிக்கையாகும். நிச்சயமாக, இது இராஜதந்திர வழிகள் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பின்னர் பேச்சு வார்த்தைக்கான முன்மொழியப்பட்ட வடிவங்கள் பரிசீலிக்கப்படலாம்" என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் என்பது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். 2010இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமா மற்றும் அப்போதைய ரஷ்ய அதிபர் டிமிட்ரி-மெட்வெடேவ் ஆகியோரால் புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த புதிய START ஒப்பந்தம் அமெரிக்காவும் ரஷ்யாவும் பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வரம்பிற்குள் கொண்டு வருகிறது.