கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்
நேற்று கனடாவின் பிரதமருடன் உரையாடல் நடத்திய பிரதமர் மோடி, சீக்கிய பிரிவினைவாத குழுக்களை கனடாவில் செயல்பட அனுமதித்ததாக கனடா மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தார். கனடாவில் இயங்கும் தீவிரவாத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வது குறித்து அவர் வலுவான கவலைகளை தெரிவித்தார். இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சீக்கியர்களுக்கான தனி நாடு பிரிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஒரு பொது வாக்கெடுப்பை காலிஸ்தான் குழுக்கள் நடத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேச்சு வார்த்தை நடத்திய அதே நாளில் இந்த வாக்கெடுப்பு கனடாவில் நடந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணமானத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சியில் ஏரளமான சீக்கியர்கள் பங்கேற்பு
இந்தியாவுக்கு எதிரான இந்த நிகழ்ச்சியில் ஏரளாமான சீக்கியர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கெடுப்பை ஏற்பாடு செய்த சட்டவிரோத காலிஸ்தான் குழுவான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்(SFJ) இந்த நிகழ்வில் 100,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக கூறியுள்ளது. சர்ரேயில் உள்ள ஒரு பள்ளியில்தான் இந்த வாக்கெடுப்பை நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் ஆயுதங்களின் படங்கள் போடப்பட்டிருந்ததால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க அந்த பள்ளி மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த சனிக்கிழமையன்று கனேடிய பிரதமரிடம் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாத சக்திகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாகவும், தூதரக வளாகங்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கனடாவில் நடந்திருக்கும் இந்த வாக்கெடுப்பு இருநாட்டு உறவுகளில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.