இந்தோனேசிய பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டுவெடிப்பு: 54 மாணவர்கள் காயம்
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தொழுகையின்போது மசூதிக்குள் அடுத்தடுத்து பல வெடிப்புகள் நிகழ்ந்ததில், பெரும்பாலும் மாணவர்கள் உட்பட குறைந்தது 54 பேர் காயமடைந்தனர். பெரும்பாலான மாணவர்களுக்குச் சிறிய காயங்களே ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். ஜகார்த்தாவின் கேலப்பா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் இருக்கும் எஸ்எம்ஏ 27 என்ற அரசுப் பள்ளியின் மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, இந்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்புகளுக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை என்று ஜகார்த்தா போலீஸ் தலைவர் அசெப் எடி சுஹேரி தெரிவித்தார்.
வெடிகுண்டு
வெடிகுண்டு தடுப்புப் படை ஆய்வு
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மசூதி வளாகத்தில் இருந்து சில பொம்மை துப்பாக்கிகள் மற்றும் பொம்மை ரைஃபிள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு தடுப்புப் படை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார். "வெடிப்புகளின் காரணத்தை அறிய போலீசார் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர். அதிகாரிகளின் பணியை முடித்த பிறகு, முடிவுகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்போம்." என்று சுஹேரி கூறினார். இந்தச் சம்பவம், சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கச்சா பாமாயில் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததையடுத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.