ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் பலி
செய்தி முன்னோட்டம்
வெள்ளியன்று காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அதில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் குழந்தைகள் என்று AP தெரிவித்துள்ளது.
உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.
காசாவில் வாழ்ந்து வரும் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்களுள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது ரஃபாவில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் போரினால் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்க்க ரஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு மத்தியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல மாதங்களாக, அந்த நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த வேண்டும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேல்
மோதல்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள்
அங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. மீதமுள்ள ஆறு ஹமாஸ் பட்டாலியன்களில் நான்கு ரஃபாவிலிருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது.
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேஸ் மீது பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ் திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதனால், 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் 6 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 34,049 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 76,901 பேர் காயமடைந்துள்ளனர்.