'ஆபரேஷன் இரும்பு வாள்': பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக போரை தொடங்கியது இஸ்ரேல்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக 'இரும்பு வாள்' நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. பலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை டஜன் கணக்கான போர் விமானங்களுடன் காசா பகுதியின் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. தடை செய்யப்பட்ட காசா பகுதியில் இருந்து கடுமையான ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல் இன்று காலை போர் நிலையை அறிவித்தது. இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த போரில் தனது நாடு கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். "நாம் போரில் இருக்கிறோம், இந்த போரில் நாம் வெல்வோம் ..." என்று நெதன்யாகு ஒரு வீடியோ அறிக்கையில் கூறியுள்ளார்.
"இஸ்ரேல் கண்டிப்பாக வெற்றி பெறும்" : இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்
டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், "ஹமாஸ் தாக்குதலைத் தொடுத்ததன் மூலம் பெரும் தவறைச் செய்துவிட்டது" என்று கூறினார். மேலும், பாலஸ்தீனப் போராளிக் குழு ஒரு போரைத் தொடங்கியுள்ளதாகக் கூறிய அவர், "இஸ்ரேல் கண்டிப்பாக வெற்றி பெறும்" என்றும் உறுதியளித்தார். பாலஸ்தீன பயங்கரவாதிகள் இன்று அதிகாலை கிட்டத்தட்ட 5000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், இஸ்ரேல் இன்று காலை போர் நிலையை அறிவித்தது.