'கருப்பு மழை' முதல் 500 கோடி கிலோ CO2 வரை: இஸ்ரேல் -ஈரான் போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா -இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் போரினால், மனித உயிரிழப்புகளுக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. போர் தொடங்கிய முதல் 14 நாட்களில் மட்டும் சுமார் 500 கோடி கிலோ (5 மில்லியன் டன்) கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்தில் கலந்துள்ளதாக தட்பவெப்பநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர் குண்டுவீச்சுகள், கட்டிடங்கள் தகர்ப்பு மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் சுமார் 2.4 மில்லியன் டன் CO2 வெளியேறியுள்ளதாக ஈரானிய ரெட் கிரசென்ட் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சுமார் 20,000 கட்டிடங்கள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளின் பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் செயல்பாடுகளும் இந்த நச்சு வாயு வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளன.
கருப்பு மழை
நச்சு "கருப்பு மழை"
கடந்த வாரம் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் வளிமண்டலத்தில் அடர்ந்த நச்சுப்புகை சூழ்ந்தது. இது தற்போது "கருப்பு மழை" என்ற பெயரில் எண்ணெய் பிசுபிசுப்புடன் கூடிய நச்சு மழையாக தரைப்பகுதியில் பெய்து வருகிறது. இதனால் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் வளிமண்டலத்தில் அபாயகரமான ரசாயனங்களைக் கலந்துள்ளதால், நீண்ட கால ஆரோக்கிய பாதிப்புகளைத் தவிர்க்க மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சர்வதேச சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒருபுறம் ராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் இந்தப் போர் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் இயற்கை சூழலையும் சீரழித்து வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.