அதிபர் பைடனின் "குறைபாடுகள் நிறைந்த" காசா திட்டத்தை ஏற்றுக்கொண்டது இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் முன்மொழியப்பட்ட காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த திட்டத்தில் நிறைய குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்ய அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும் என்றும் பிரதமர் நெதன்யாகு கூறியதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார். நெதன்யாகுவின் தலைமை வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ஓஃபிர் பால்க், பிரிட்டிஷ் செய்தித்தாளான தி சண்டே டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், "பைடனின் முன்மொழிவை நாங்கள் ஒப்புக்கொண்டோம். அது ஒரு நல்ல ஒப்பந்தம் அல்ல, ஆனால் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று கூறியுள்ளார்.
ஹமாஸ் இல்லாத ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒப்பந்தம்: பைடன்
ஆறு வார போர்நிறுத்தத்தை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தை இஸ்ரேல், ஹமாஸிடம் முன்மொழிந்துள்ளதாக மே 31 அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். ஒரு பாதி இஸ்ரேலிய இராணுவத்தை வாபஸ் பெறுதல், சில பணயக்கைதிகளை விடுவித்தல் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்தின்படி, முதல் கட்டமாக, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக பெண்கள், முதியவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். இரண்டாம் கட்டத்தில், பைடனின் முன்மொழிவின்படி, ஆண் வீரர்கள் உட்பட மீதமுள்ள அனைத்து பணைக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். மேலும் இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து வெளியேறும். இந்த ஒப்பந்தம் காசாவுக்கு ஹமாஸ் இல்லாத ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.