LOADING...
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இந்தியா மீது ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு; 'போர் நிலை' என பாதுகாப்பு அமைச்சர் கருத்து
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியா மீது ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இந்தியா மீது ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு; 'போர் நிலை' என பாதுகாப்பு அமைச்சர் கருத்து

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2025
07:44 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே கார் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தியா மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்தத் தாக்குதல்களால் பாகிஸ்தான் 'போர் நிலையில்' இருப்பதாகக் கூறியுள்ளார். "இந்தத் தற்கொலை படைத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் இந்தியாவின் உளவு அமைப்புகளால் நடத்தப்படுகிறார்கள். சமீபத்திய டெல்லி சம்பவத்தையும், இதையும் இணைத்துப் பார்க்கும்போது, இந்தக் கருத்து வலுப்படுகிறது. இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கிறது," என்று பிரதமர் ஷெரீஃப் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியவர்களை அரசு பழிவாங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

காவாஜா ஆசிஃப்

பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிஃப் கருத்து

பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிஃப், இஸ்லாமாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு 'போர் நிலையில்' இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போது, பாகிஸ்தான் போர் நிலையில் உள்ளது என்றே அர்த்தம். நம் நாட்டின் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்," என்று அவர் கூறியுள்ளார். குண்டுவெடிப்புக்கு காபூல் ஆட்சியாளர்களை நேரடியாகக் குற்றம் சாட்டிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான "போர்" இனி எல்லைப் பகுதியான டுராண்ட் கோட்டுடன் மட்டும் நின்றுவிடாது என்று எச்சரித்தார். "இந்தச் சூழலில், காபூலின் ஆட்சியாளர்களுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு அதிக நம்பிக்கை வைப்பது பயனற்றது" என்று அவர் X இல் கூறினார்.

விவரங்கள்

இஸ்லாமாபாத் தாக்குதல் விவரங்கள்

இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வெளியே, நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை குறிவைத்து ஒரு சக்திவாய்ந்த தற்கொலை படை கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல், டெல்லியின் செங்கோட்டை அருகே கார் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஒரு நாள் கழித்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி தாக்குதலில் பயங்கரவாத அமைப்பான JeM -இற்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.