வெளிநாட்டில் படிக்க ஆசையா? அயர்லாந்து அரசின் 100% இலவச ஸ்காலர்ஷிப்; இந்திய மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வெளிநாட்டில் உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அயர்லாந்து அரசு ஒரு பொற்கால வாய்ப்பை அறிவித்துள்ளது. 'அயர்லாந்து அரசு சர்வதேச கல்வி உதவித்தொகை 2026' (GOI-IES) என்ற இத்திட்டத்தின் கீழ், சுமார் 60 திறமையான சர்வதேச மாணவர்களுக்கு முழுமையான நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் அயர்லாந்தின் உயர் கல்வி ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கான முழுப் படிப்பு கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். இது தவிர, மாணவர்களின் தங்குமிடம் மற்றும் இதர வாழ்வாதாரச் செலவுகளுக்காக சுமார் 10,000 யூரோ (சுமார் 9 லட்சம் ரூபாய்க்கு மேல்) உதவித்தொகையாக வழங்கப்படும். முதுகலை, முதுகலை டிப்ளமோ மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை பொருந்தும்.
விண்ணப்பம்
தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து அல்லாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அயர்லாந்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில தற்காலிகமான அல்லது இறுதி சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். கல்வியில் சிறந்த மதிப்பெண்கள், தலைமைத்துவப் பண்பு மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் தொடங்கும் நாள் ஜனவரி 29, 2026, விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 12, 2026 (மாலை 5 மணி - அயர்லாந்து நேரப்படி) ஆகும். முடிவுகள் ஜூன் 2026 இல் வெளியாகும். ஆர்வமுள்ள மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க hea.ie என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.