11வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் கடந்த 24 மணி நேரத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் முக்கிய நிகழ்வுகள் இதோ: ஈரானைப் பொறுத்தவரை கிழக்கு டெஹ்ரானில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதால், டெஹ்ரான் நகரம் முழுவதும் நச்சுப் புகையால் சூழப்பட்டுள்ளது. இதுவரை 1,255 பேர் பலியாகியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் ஆதரவாளர்கள் டெஹ்ரானில் திரண்டு போராட்டங்களை நடத்தினர்.
போர் முடிவு
விரைவில் போரை முடிக்க டொனால்ட் டிரம்ப் திட்டம்
ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் 90% ஏவுகணை தளங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும், ஆனால் இந்த வாரமே முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி வாயிலாக ஈரான் போர் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து ஆலோசித்தனர். இதற்கிடையே, ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் சுட்டு வீழ்த்தின. பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில் 29 வயது பெண் ஒருவர் பலியானார். அமீரகத்திற்கு ஏவுகணைகளை வழங்குவதாகவும், மத்திய கிழக்கிற்கு கண்காணிப்பு விமானங்களை அனுப்புவதாகவும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகள்
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள எரிபொருள் தொட்டிகளை ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்கியது. டெல் அவிவ் அருகே ஒருவர் பலியானார். லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 486ஐத் தாண்டியுள்ளது. 7 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $120லிருந்து $90 ஆகக் குறைந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பாதையை மீண்டும் திறக்க பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
இந்தியா
இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிரம்
இந்தியாவில் பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்கங்கள் பிரதமர் மோடிக்கு அவசர தலையீட்டைக் கோரி கடிதம் எழுதின. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி பொதுமக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், இதற்காக கண்காணிப்புக் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. கூடுதலாக, எல்பிஜி சிலிண்டர் முன்பதிவிற்கான இடைவெளியையும் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.