ஈரான் -அமெரிக்கா போர் அபாயம்: "பிராந்தியப் போர் வெடிக்கும்" என கமேனி கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா ஈரான் மீது ராணுவத் தாக்குதலை தொடங்கினால், அது ஒரு "பிராந்திய போராக" மாறும் என்று அவர் கூறியுள்ளார். ஈரான் நாட்டின் நிறுவனர் ருஹொல்லா கொமேனியின் நினைவிடத்திற்கு சென்றிருந்த கமேனி, அங்கு ஆற்றிய உரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ராணுவ மிரட்டல்களை கடுமையாகச் சாடினார். "அமெரிக்கர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இம்முறை அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பாதிக்கும் பிராந்தியப் போராக அமையும். அமெரிக்காவின் போர்க்கப்பல்களைக் கண்டு ஈரானிய மக்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்
தொடர்ந்து ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்
மறுபுறம், ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் ஒரு "திருப்திகரமான" ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். "அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும், அவர்கள் எங்களிடம் தீவிரமாகப் பேசி வருகின்றனர்" என்று ட்ரம்ப் ஒருபுறம் சமரசத்தை காட்டினாலும், மற்றொருபுறம் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி அழுத்தத்தைத் தொடர்ந்து வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Trump on Iran:
— Clash Report (@clashreport) February 1, 2026
You could make a negotiated deal that would be satisfactory, with no nuclear weapons, and they should do that. But I don’t know that they will.
They are talking to us — seriously talking to us. pic.twitter.com/wXBlhvftJl
போராட்டங்கள்
ஈரானில் அதிகரித்துள்ள உள்நாட்டுப் போராட்டங்கள்
கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் நிலவிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் மோசமான வாழ்வாதாரத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஈரான் அரசு 3,117 பேர் பலியானதாகக் கூறினாலும், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 6,713-க்கும் மேல் இருக்கும் எனத் தெரிவிக்கின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்கிய விதம் குறித்து ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என 'சிவப்புக் கோடு' (Red Line) விதித்துள்ளார். அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' உள்ளிட்ட போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் முகாமிட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.