ஈரான் உச்ச தலைவர் மொஹ்தபா கமேனி ரகசிய இடத்தில் தஞ்சம்; அமெரிக்கா -ஈரான் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏன்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்குப் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உளவுத்துறை தகவல்களை அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரானின் தற்போதைய புதிய உச்ச தலைவரான மொஹ்தபா கமேனி, வெளி உலகத்துடனான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத ஒரு ரகசியப் பதுங்கு குழியில் மிகத் தீவிரப் பாதுகாப்புடன் தங்கியுள்ளார்.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை தாமதமாவதற்கு என்ன காரணம்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற தாக்குதலின் போது மொஹ்தபா கமேனி காயமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானை 1989 முதல் ஆண்டு வந்த அவரது தந்தை அலி கமேனி இந்த போரில் கொல்லப்பட்டதை அடுத்து, மொஹ்தபா கமேனி தனது பாதுகாப்பை முன்னிட்டு முற்றிலும் தலைமறைவாகியுள்ளார். ஈரான் அரசுக்குள்ளேயே அமெரிக்க உளவுத்துறை ஊடுருவியுள்ளதால், தங்களின் இருப்பிடம் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக ஈரானின் மூத்த தலைவர்கள் அனைவரும் தற்போது நிலத்தடி பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தகவல் தொடர்பு
ஈரான் அரசு கமேனியுடன் தொடர்பு கொள்ளும் முறை
உச்ச தலைவர் மொஹ்தபா கமேனி எங்கு இருக்கிறார் என்பது ஈரானின் மிக உயர்மட்ட அரசு அதிகாரிகளுக்கே தெரியாது. அவரோடு நேரடித் தொடர்பு கொள்ள எவ்வித டிஜிட்டல் அல்லது போன் வசதிகளும் பயன்படுத்தப்படுவதில்லை. அமெரிக்கா அனுப்பும் தூதுச் செய்திகள், பல தூதர்கள் மற்றும் மனித சங்கிலி நெட்வொர்க் வழியாகப் பயணித்தே உச்ச தலைவரை அடைகிறது. அவர் ஒரு கடிதத்தைப் படித்துவிட்டுத் தரும் பதில்களும் அதே நீண்ட பாதையிலேயே திரும்பி வருவதால், அமெரிக்காவுக்குக் கிடைக்கும் பதில்கள் அனைத்தும் சில நாட்கள் முந்தைய பழைய தகவல்களாகவே இருக்கின்றன.
ஒப்புதல்
அமைதி ஒப்பந்த திட்டத்திற்கு ஒப்புதல்
இந்தக் கடுமையான தொடர்புச் சிக்கல்களுக்கு மத்தியிலும், ஈரானின் உச்ச தலைவர் தற்போதைய அமைதி ஒப்பந்தத்தின் பொதுவான வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகப் பேச்சுவார்த்தக் குழு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'டிரூத் சோசியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில், "இன்னும் சில நாட்களில் ஈரான் விவகாரத்தில் இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக" பதிவிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஈரானின் இந்த ரகசிய அதிகாரத்துவ நகர்வுகள் காரணமாக, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதி திரும்புமா என்பது இன்னும் சில தினங்களில் தெளிவாகும்.