LOADING...
"அடுத்த இலக்கு கூகுள், மைக்ரோசாப்ட்": அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்
ஏப்ரல் 1, முதல் இந்தத் தாக்குதல்கள் தொடங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

"அடுத்த இலக்கு கூகுள், மைக்ரோசாப்ட்": அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2026
06:11 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப மற்றும் தொழில் நிறுவனங்களைக் குறிவைக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 1, முதல் இந்தத் தாக்குதல்கள் தொடங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் வெளியிட்டுள்ள பட்டியலில் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 முக்கிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் இலக்குகளைக் கண்டறியவும், தொழில்நுட்பம் மூலம் தாக்குதல்களைத் திட்டமிடவும் இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்களே முக்கியப் பங்காற்றுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த நிறுவனங்களின் பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கிளைகள் தங்களின் "சட்டபூர்வமான இலக்குகள்" என்று ஈரான் அறிவித்துள்ளதுடன், அங்கிருக்கும் பணியாளர்களை உடனடியாக வெளியேறுமாறும் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் நிலைப்பாடு

இந்த மிரட்டலுக்குப் பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானின் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க அமெரிக்க ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் 90 சதவீதம் வரை அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அமெரிக்க ராணுவம் தனது செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI), செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் கிளவுட் கட்டமைப்புகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருகிறது. இந்தத் தொழில்நுட்பங்களே ஈரானின் ராணுவ நிலைகளைத் துல்லியமாகக் கண்டறிய உதவுவதால், தற்போது போரின் போக்கு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மையங்களை நோக்கித் திரும்பியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement