'அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி...': இந்தியாவைப் புகழ்ந்து தள்ளிய ஈரான்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவை "மிகவும் நன்று" எனக் குறிப்பிட்டிருக்கும் ஈரான், இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மைக்குத் தான் "மிகப்பெரிய முக்கியத்துவம்" அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்தித்து பேசிய சில நாட்களில் இந்த நேர்மறையான தகவல் வெளியாகியுள்ளது.
உறவு
நீண்டகால வரலாற்றுப் பிணைப்பும் பொருளாதார உறவும்
ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், இந்தியாவும் ஈரானும் "நீண்டகால, வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சாரப் பிணைப்பைப்" பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் ஆகிய இரண்டிலும் உறுப்பினராக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் இந்தியாவுடன் தங்களுக்குச் சிறந்த உறவு இருப்பதாகவும் கூறினார்.
செப்டம்பர் 12 முதல் 13 வரை புதுடெல்லியில் இந்தியாவின் தலைமையில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் தலைவர்கள் உச்சிமாநாட்டை, இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் மூலோபாய ரீதியாக மிக முக்கியமான 'சாபஹார் துறைமுகம்' வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய வர்த்தக பாதைகள் குறித்து விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை
இந்தியா-ஈரான் இடையே வலுத்துவரும் இந்த உறவை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இது தொடர்பாகப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் தடைகளைத் தாண்டி வருவாய் ஈட்ட ஈரானுக்கு எந்தவொரு நாடும் உதவக் கூடாது என்றும், அவ்வாறு உதவும் நாடுகள் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பன்னாட்டு ராஜதந்திர உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதை இது காட்டுகிறது.