LOADING...
போரினால் பலியாகும் அப்பாவி இந்தியர்கள்: அமெரிக்கக் கடற்படை ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 3 இந்திய மாலுமிகள் பலி
அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்

போரினால் பலியாகும் அப்பாவி இந்தியர்கள்: அமெரிக்கக் கடற்படை ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 3 இந்திய மாலுமிகள் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2026
06:51 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த கடந்த வாரத்தில், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் மிக முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடல் பகுதியில் பயணித்த வணிக கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பல கப்பல்களின் எஞ்சின் அறைகள் தீப்பற்றி எரிந்துள்ளதோடு, மருத்துவ உதவி கிடைக்காமல் மேலும் ஒரு இந்திய மாலுமி கப்பலிலேயே உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தாக்குதல்

அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் - 3 இந்தியர்கள் பலி

கடந்த ஜூன் 8, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமனின் ஷினாஸ் கடற்கரைப் பகுதியில் இந்திய மாலுமிகளைக் கொண்டு பயணித்த மாரிவெக்ஸ், செட்டபெல்லோ மற்றும் ஜல்வீர் ஆகிய மூன்று வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை கடுமையான தாக்குதல்களை நடத்தியது. அமெரிக்காவின் அதிநவீன ஹெல்ஃபயர் ஏவுகணைகள் தாக்கியதில் 'செட்டபெல்லோ' கப்பல் கடுமையாகச் சேதமடைந்தது. இத்தாக்குதலில் அக்கப்பலில் பணியாற்றிய தலைமைப் பொறியாளர், எஞ்சின் ஃபிட்டர் மற்றும் ஒரு டெக் கேடட் ஆகிய 3 இந்திய மாலுமிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மாரிவெக்ஸ் மற்றும் ஜல்வீர் ஆகிய கப்பல்களின் எஞ்சின் அறைகள் தீப்பற்றி எரிந்தபோதும், அதிலிருந்த 20-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குற்றச்சாட்டு

அமெரிக்காவின் குற்றச்சாட்டும், கப்பல் நிறுவனத்தின் மறுப்பும்

இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் CENTCOM வெளியிட்டுள்ள விளக்கத்தில், இக்கப்பல்கள் அனைத்தும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெயைக் கடத்திச் செல்ல முயன்றதால் தற்காப்புக்காக தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. ஆனால், செட்டபெல்லோ கப்பலை நிர்வகிக்கும் ஐஓஎஸ் மரைன் நிறுவனம் இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்களது கப்பல் கடந்த 10 நாட்களாக ஒரே இடத்தில் நிலையாக நின்றுகொண்டிருந்தது என்றும், அமெரிக்கக் கடற்படையிடம் இருந்து எவ்வித எச்சரிக்கை சமிக்ஞையோ அல்லது தொடர்போ வரவில்லை என்றும், ஈரானிய எண்ணெய்க்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement

உடல் சிதைவு

பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாலுமியின் உடல் சிதைவு

மற்றொரு கொடூர சம்பவமாக, ஓமனின் துக்ம் துறைமுக பகுதியில் நின்று கொண்டிருந்த எம்.டி செலேஸ்டியல் என்ற கப்பலில் பணியாற்றிய 35 வயதான இந்திய மாலுமி நிஷாந்த் உயிர்தநாதன் என்பவர் கடந்த ஜூன் 8 அன்று கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் கடற்படை முற்றுகையை அமல்படுத்தி வரும் அமெரிக்கக் கடற்படைக்கு ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கப்பலின் கேப்டன் அவசர மருத்துவ உதவி கேட்டு (SOS) தொடர் கோரிக்கைகளை அனுப்பியுள்ளார். ஆனால், அமெரிக்கக் கடற்படை அதற்குப் பதிலளிக்க முன்வரவில்லை. இதன் காரணமாக ஜூன் 11 அன்று நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

சோகம்

உடலை பாதுகாக்க முடியாத சோகம்

கப்பலில் முறையான குளிரூட்டும் வசதி இல்லாததால், அவரது உடல் அழுகாமல் இருக்கப் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி, அதன் மேல் குளிர்ந்த நீர் பாட்டில்களை வைத்து மற்ற மாலுமிகள் கண்ணீர் வடித்துள்ளனர். 3 நாட்களுக்குப் பிறகு ஜூன் 14 அன்று அவரது உடல் கிரேன் மூலம் கீழே இறக்கப்பட்டு, தற்போது இந்தியத் தூதரகம் மூலம் தாயகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேசக் கடற்பரப்பில் இந்திய மாலுமிகள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தாக்குதல்களுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதோடு, புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து இதற்கான விளக்கத்தைக் கேட்டுள்ளது.

Advertisement