வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பராமரிப்பது போன்ற வீடியோவை ஹமாஸ் பயங்கரவாத குழு டெலிகிராம் சேனலில் பரப்பி வருகிறது. காசா பகுதியை தளமாகக் கொண்ட 'ஹமாஸ்' என்ற பயங்கரவாத குழு கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது. அதனை தொடர்ந்து ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பெரும் போர் வெடித்தது. இந்த தாக்குதலின் போது, பல தேசங்களைச் சேர்ந்த 150 பேரை ஹமாஸ் பணயக் கைதிகளாகப் பிடித்து சென்றது. இந்த பணயக் கைதிகள் தற்போது காசா பகுதியில் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பயத்தை பரப்பும் நோக்கத்தில், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை பராமரிப்பது போன்ற வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
ஹமாஸுக்கு எதிரான தரை வழி தாக்குதல் இன்று தொடங்கியது
அந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் குழந்தைகள் 4-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போல் தெரிகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் பணயக்கைதிகளை விடுவிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வதாக சபதம் செய்துள்ளன. பணயக்கைதிகள், உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றான காசா பகுதி முழுவதும் உள்ள ஹமாஸ் மறைவிடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான தரை வழி தாக்குதல் இன்று தொடங்கும் என்று இஸ்ரேல் அறிவித்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் புகலிடம் தேடி தெற்கு காசாவிற்கு இன்று தப்பிச் சென்றுள்ளனர். இந்த போரில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்களும், 1,800 காசா வாசிகளும்(580க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட) உயிரிழந்துள்ளனர்.