240 பயணிகளுடன் கடலில் மாயமான கப்பல்! இந்தோனேசியாவில் தீவிர தேடுதல் வேட்டை
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுராபயா நகரிலிருந்து போர்னியோ தீவில் உள்ள பஞ்சர்மசின் நோக்கிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று 240 பயணிகளுடன் ஜாவா கடலில் திடீரென மாயமாகியுள்ளது. வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8 என்ற அந்தக் கப்பல் சனிக்கிழமை (செப்டம்பர் 12) காலை புறப்பட்டுச் சென்ற நிலையில், கடலின் நடுவே பயணிக்கும் போது தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. தகவல் கிடைத்தவுடன் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் கப்பலையும் அதில் உள்ள பயணிகளையும் கண்டுபிடிக்கத் தீவிர மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
தொடர்பு துண்டிப்பு
மோசமான வானிலை மற்றும் தொடர்பு துண்டிப்பு
சுராபயாவில் இருந்து புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே கப்பல் கடுமையான மோசமான வானிலையை சந்தித்ததாகக் கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஞ்சர்மசின் துறைமுகத்திலிருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் ஜாவா கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, கப்பலின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே கப்பல் இயக்கும் நிறுவனமான பிடி வெர்கோ யோயல் ரிஹி உடனடியாகக் மீட்பு முகமை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உதவியைக் கோரியுள்ளது.
மீட்புக் குழு விரைவு
கடைசி இருப்பிடம் நோக்கி விரைந்த மீட்புக் குழுவினர்
தகவல் அறிந்தவுடன் பஞ்சர்மசினில் உள்ள பஸிரிக் தேடுதல் மற்றும் மீட்பு மையத்திலிருந்து சிறப்புக் குழுவினர் மீட்புக் கப்பல்கள் மூலம் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
கப்பல் கடைசியாகத் தொடர்பில் இருந்த ஜாவா கடல் பகுதிக்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர், கப்பலின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி உயிர்ச்சேதம் அல்லது அசம்பாவிதங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேடுதல் வேட்டைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.