
அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டும் வகையில், ரஷ்யாவிற்கான பாகிஸ்தானின் தூதர் முகமது காலித் ஜமாலி, இந்தியா தாக்கினால் அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் எனும் தொனியில் மறைமுக எச்சரிக்கை வெளியிட்டார்.
ரஷ்ய ஊடகமான ஆர்டிக்கு அளித்த பேட்டியில், இந்தியா இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களைத் திட்டமிடுவதாகக் கூறும் கசிந்த உளவுத்துறை தகவல்களை பாகிஸ்தான் கவனித்துள்ளதாக ஜமாலி கூறினார்.
"நாங்கள் ராணுவ வலிமையை ஒப்பிட விரும்பவில்லை, ஆனால் தாக்கப்பட்டால், வழக்கமான மற்றும் அணு ஆயுதம் என ஒவ்வொரு விருப்பத்தையும் பயன்படுத்தி பதிலடி கொடுப்போம்" என்று அவர் கூறினார்.
நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் நடவடிக்கை
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அனைத்து பாகிஸ்தான் விசாக்களையும் ரத்து செய்தல் மற்றும் மே 24 வரை பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளி கட்டுப்பாடுகளை விதித்தல் உள்ளிட்ட கடுமையான பதிலடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
பஹல்காம் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய பாதுகாப்பு படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் பீதியில் இருந்தாலும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மற்றும் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி உள்ளிட்டவர்கள், பதிலடி கொடுப்பதாக எச்சரித்து, நாட்டின் ஏவுகணை திறன்களை முன்னிலைப்படுத்தி ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவம் அதன் அணுசக்தி திறன் கொண்ட அப்தாலி ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.