ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
காசாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் அவர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில், ஹமாஸுடனான போரில் இஸ்ரேலால் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இனப்படுகொலையாக பார்க்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஏஜு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனியர்கள் மீது வான்வழித் தாக்குதல்கள், தரைச் சண்டை ஆகியவை நடத்தப்பட்டது மட்டுமல்லாமல், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கிட்டத்தட்ட 35,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்படி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
காசா
பாதிக்கப்பட்டவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றிய இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வழிவகுத்தது.
அந்த நபர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையின் (டிஎஸ்எஸ்) ஊழியர் ஆவார்.
பாதிக்கப்பட்டவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், செய்தி நிறுவனமான PTI, அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் கூறியுள்ளது.
பின்னர், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், திங்களன்று ரஃபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறை(டிஎஸ்எஸ்) ஊழியர் ஒருவர் இறந்ததையும், மற்றொரு டிஎஸ்எஸ் ஊழியர் காயமடைந்ததையும் அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறியுள்ளார்.