இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா!
2022ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர்களை இந்திய மோசடி கால் சென்டர்கள் கொள்ளை அடித்திருப்பதாக அமெரிக்காவின் FBI தெரிவித்திருக்கிறது. அமெரிக்க குடிமக்கள் கால் சென்டர் மோசடிகளால் 10 பில்லியன் டாலர்கள் இழந்திருப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) தெரிவித்திருக்கிறது. இந்த மோசடி கால் சென்டர்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவது போல் அணுகி, மக்களுக்கு சந்தேகம் வராத அளவு பேசி, அவர்களது தனிப்பட்ட வங்கி கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களைப் பெற்று பண மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி கும்பல்களில் சிலர் காதலிப்பது போல் நடித்தும் ஃபிஷிங் முறையில் ஏமாற்றியுள்ளனர்.
அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுக்கும் இந்திய கால் சென்டர்கள்:
இந்த வருடத்தின் 11 மாதங்களில் மட்டும் 10.2 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் முடிவதற்குள் 12 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களையே இந்த மோசடி கும்பல்கள் அதிகம் குறி வைக்கின்றன. கடந்த வருடம், அமெரிக்காவில் 6.7 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்பட்டிருந்தது. ஆகவே, இது போன்ற மோசடிகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 47% அதிகரித்துள்ளது. இந்த ஃபிஷிங் கும்பல்களை பிடிக்கவும், இழந்த பணத்தை மீட்கவும், சிபிஐ, இன்டர்போல் மற்றும் டெல்லி காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவும், புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நிரந்தரப் பிரதிநிதி ஒருவரை அமெரிக்கா நியமித்துள்ளது.