ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா
ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பேருந்து விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து, கனடாவை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார். வெளியேற்றத்திற்கு எதிராக ஜஸ்கிரத் சிங் சித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தோல்வியடைந்ததை அடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார். ஏப்ரல் 6, 2018 அன்று சஸ்காட்செவன் நெடுஞ்சாலை-35 மற்றும் சஸ்காட்செவன் நெடுஞ்சாலை-335 பகுதியில் இருக்கும் சஸ்காட்செவன் ஆர்ம்லிக்கு அருகில் உள்ள சந்திப்பில் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. எதிர் பாதையில் ஒரு லாரியை ஓட்டி வந்த சித்து, சிக்னலை கவனிக்காமல், ஜூனியர் ஹாக்கி அணியை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்தின் மீது மோதினார். அந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
சித்து வழக்கில் நீதிமன்றம் என்ன கூறியது?
இதனால், சித்துவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சித்துவுக்கு பரோல் வழங்கப்பட்டது . ஆனால், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கிடையில், கூட்டாட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சித்து, தன் தவறை ஒப்புக்கொள்வதாகவும், தன் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி இருந்தார். எனினும், இந்த விபத்துக்கு முன் தான் எந்த சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்ததில்லை என்பதை கருத்தில் கொண்டு, தன்னை நாட்டை விட்டு மட்டும் வெளியேற்ற வேண்டாம் என்று சித்து நீதிமன்றத்தில் கோரியிருந்தார். ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் செய்த தவறினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை சுட்டி காட்டி சித்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.