இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில் உள்ள பல பல்கலைகழகங்களில் நேற்று பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக முற்றத்தில் முகாமிடுவதற்காக போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்ததை அடுத்து தமிழகத்தில் பிறந்த அச்சிந்தியா சிவலிங்கன் உட்பட 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பிரின்ஸ்டன் முன்னாள் மாணவர் வார இதழ் (PAW) தெரிவித்துள்ளது. இரண்டு பட்டதாரி மாணவர்கள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டனர் என்று பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மோரில் கூறியுள்ளார்.
அந்த மாணவி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை
வளாகத்தில் கூடாரங்கள் அமைப்பது பல்கலைக்கழக கொள்கையை மீறுவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், அவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அவர்களது வகுப்பறைக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மற்றொரு பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ஹாட்ச்கிஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த அச்சிந்தியா சிவலிங்கம் பிரின்ஸ்டனில் சர்வதேச வளர்ச்சி-பொது விவகாரங்களில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். அவருடன் கைது செய்யப்பட்ட சயீத் அங்கு முனைவர் பட்டம் பயின்று வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, மற்ற எதிர்ப்பாளர்கள் தானாகவே முன்வந்து தங்களுடைய முகாமை கலைத்தனர் என்று மைக்கேல் ஹாட்ச்கிஸ் கூறியுள்ளார்.