ஆங்கில புலமைத் தேர்வு நடத்தி 7,000க்கும் மேற்பட்ட இந்திய லாரி ஓட்டுநர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்ட ஆங்கில மொழிப் புலமை தேர்வுகளில் தோல்வியடைந்த காரணத்தால், 7,000-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி ஓட்டுநர்கள் பணி செய்ய தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய வம்சாவளியை சேர்ந்த, குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த சீக்கிய ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய லாரி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான உயர்மட்ட சாலை விபத்துகளுக்குப் பிறகு இந்த விதி அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஒரு இந்திய ஓட்டுநர் மூன்று அமெரிக்கர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
டெஸ்ட்
வாகன ஓட்டுனர்களுக்கு மொழிக் கட்டாயம்
இதன் விளைவாக, அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் ஷான் டஃபி, "வர்த்தக லாரி ஓட்டுநர்கள் (Commercial Driver's Licence - CDL) கட்டாயம் ஆங்கிலத்தில் பேசவும், புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்," என்று அறிவித்தார். புதிய விதிகளின்படி, லாரி ஓட்டுநர்கள் பொதுமக்களுடன் உரையாட, சாலை அறிகுறிகளைப் புரிந்துகொள்ள, அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள மற்றும் சரியான பதிவேடுகளைப் பராமரிக்க போதுமான ஆங்கிலத் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் 2025 நிலவரப்படி, 7,248 ஓட்டுநர்கள் ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது ஜூலை மாதத்தை விட பல மடங்கு அதிகம்.
சிக்கல்
சீக்கிய ஓட்டுநர்கள் சந்திக்கும் சிக்கல்
வட அமெரிக்க பஞ்சாபி லாரி ஓட்டுநர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, சுமார் 1.30 லட்சம் முதல் 1.50 லட்சம் வரையிலான ஓட்டுநர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த புதிய கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாதுகாப்பை மேம்படுத்துவதை விட, இருமொழி பேசும் ஓட்டுநர்களைப் பாகுபாட்டுடன் குறிவைப்பதாக தொழில் துறையினரும், சீக்கிய ஆதரவுக் குழுக்களும் விமர்சித்துள்ளனர். "பல ஆண்டுகளாகப் பாதுகாப்பாக வண்டி ஓட்டிய ஓட்டுநர்கள், இப்போது சாலை ஓரத்தில் சோதனை நடக்கும்போது ஆங்கிலத்தில் வேகமாகப் பதிலளிக்க முடியாததால் வெளியேற்றப்படுகிறார்கள்" என்று ஓட்டுநர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.