லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதால் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர். செய்தி நிறுவனமான PTIயின் படி, இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. அந்த மூன்று இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த ஏவுகணை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் இஸ்ரேலின் வடக்கில் உள்ள கலிலி பகுதியில் இருக்கும் மோஷாவ்(கூட்டு விவசாய சமூகம்) என்ற தோட்டத்தை தாக்கியது என்று மீட்பு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேகன் டேவிட் அடோம்(எம்டிஏ) ஜாக்கி ஹெல்லர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்கள்
பலியானவர் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் என்பது காயமடைந்த இரண்டு இந்தியர்களின் பெயர்கள் ஆகும். "ஜார்ஜ் முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதால் பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். மேலும் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருடன்தொடர்பில் உள்ளார்" என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது. மெல்வின் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஸாபித்தில் உள்ள Ziv மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.