
ஐநாவில் இந்திய செய்தியாளரின் சரமாரி கேள்வியால் ஸ்தம்பித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
செய்தி முன்னோட்டம்
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுவதற்காகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை நோக்கி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியச் செய்தியாளர் ஒருவர் கடுமையான கேள்வியை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட அரங்கிற்குள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பிரதமர் ஷெரீஃப் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஏஎன்ஐ செய்தியாளர், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் எப்போது நிறுத்தப் போகிறது?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியைத் தொடக்கத்தில் தவிர்த்த ஷெபாஸ் ஷெரீஃப், செய்தியாளர் மீண்டும் அதே கேள்வியைச் சத்தமாக எழுப்பியபோது, பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குப் பதிலளித்த ஷெபாஸ் ஷெரீஃப், "நாங்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வருகிறோம். நாங்கள் அதைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.
இந்தியா
இந்தியாதான் உங்களை தோற்கடித்துக் கொண்டிருக்கிறது
உடனே இந்தியச் செய்தியாளர், "ஆனால், இந்தியாதான் உங்களைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது, பாகிஸ்தான் பிரதமரே" என்று மேலும் அழுத்தமாகக் கூறினார். இந்த நேரடியான கருத்துகளை எதிர்கொள்ள முடியாத ஷெபாஸ் ஷெரீஃப், அமைதியாகக் கூட்டத்திற்குச் சென்று விட்டார். முன்னதாக, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த ஷெபாஸ் ஷெரீஃப், ஐநா பொதுச் சபையில் ஆற்றிய உரையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது டிரம்ப் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிகளைப் பாராட்டினார். அமைதிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் ஷெபாஸ் ஷெரீஃப் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.