கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை
கனடாவில் உள்ள இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்து கனேடிய அதிகாரிகளிடம் இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இவருக்காக ஜூலை 8 ஆம் தேதி கனடாவில் ஒரு பேரணியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த பேரணிக்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்களில், ஒட்டாவாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொராண்டோவில் உள்ள இந்திய தூதரக ஜெனரல் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
'அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும்': இந்திய தூதர்
இந்த மிரட்டல் குறித்து, குளோபல் அஃபர்ஸ் கனடா,கனடாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இராஜதந்திர பாதுகாப்புடன் பணிபுரியும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ்(RCMP) ஆகிய அரசாங்கங்க அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளதாக மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கனடா தினத்திற்கான விடுமுறைகள் முடிந்த பிறகு, இது குறித்து முறையாக நடவடிக்கைப்பட உள்ளது. இந்நிலையில், "கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், அவர்கள் வெளிநாட்டு தூதர்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கின்றனர். இது கனேடிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் நோக்கமாக இருக்காது. அத்தகைய உரிமைகள் எங்கும் வழங்கப்படாது." என்று இந்திய தூதர் சஞ்சய்குமார் வர்மா ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு உரிமையும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான கடமைகளுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.